பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுதல்
பிரச்சினையான அல்லது கடுந்துயரான சூழ்நிலைகளில், மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள் அல்லது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் பலர் ஜெபிக்க நாடுகிறார்கள், ஆனால் நாம் எதற்காக ஜெபிப்பது அல்லது எப்படி ஜெபிப்பது? பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதே மிக எளிமையான மற்றும் உதவிகரமான வழியாகும் (ரோ. 10:13). கூப்பிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான ஜெபம்; இது வெறும் ஒரு வேண்டுகோள் அல்லது தொடர்பு கொள்ளுதல் அல்ல, மாறாக நம்மை பலப்படுத்தி, நம் ஆவிக்குரிய பெலனைப் பராமரிக்கிற, ஆவிக்குரிய சுவாசப்பயிற்சியாகும்.
“மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப் பற்றிக் கூப்பிட்டேன்; என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.” புல. 3:55-56
மேற்கண்ட வசனங்களில், கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதென்றால், அவரை நோக்கிக் கதறுவதும், ஆவிக்குரிய காற்றைச் சுவாசிப்பதுமாகும் என்று எரேமியா கூறுகிறார். கர்த்தருடைய பெயரை நோக்கி இப்படி கூப்பிடுவது, நம் பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து உடனடியாக நம்மை உள்ளாக விடுவிக்கிறது.
சங்கீதம் 118:5இல், “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” என்று சங்கீதக்காரன் சாட்சியமளிக்கிறான். மேலும், சங்கீதம் 50:15இல், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” என்று வாசிக்கிறோம். பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கூப்பிடுவது ஒரு வழியாக இருக்கிறது என்பதை இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன.
கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதற்கு இன்னொரு காரணம், நெருக்கத்திலிருந்தும் (சங். 18:6; 118:5), ஆபத்திலிருந்தும் (சங். 50:15; 86:7; 81:7) துக்கத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் (சங். 116:3-4) விடுவிக்கப்படுவதற்காகும். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதற்கு விரோதமாய் விவாதம்பண்ணியிருக்கிறவர்கள்கூட, தங்களுக்கு ஓர் ஆபத்தோ சுகவீனமோ நேரிடும்போது தாங்களாகவே அவரை நோக்கி கூப்பிடுவதைக் கண்டிருக்கிறார்கள். நம் வாழ்க்கையில் எந்தவித ஆபத்தும் இல்லாதபோது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதற்கு விரோதமாய் நாம் விவாதிக்கலாம். ஆனால் ஆபத்து வரும்போது அவரை நோக்கி கூப்பிடு என்று யாரும் நமக்கு சொல்ல வேண்டியதில்லை. நாமாகவே கூப்பிடுவோம்.
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1, பக். 38*
கர்த்தருடைய பெயரை நோக்கிக் கூப்பிடும் நடைமுறைப் பயிற்சி புதியதல்ல. நாம் அதை பைபிள் முழுவதும் பார்க்கிறோம் (ஆதி. 4:26, ஆதி. 12:8, அப். 22:16, 2 தீமோ. 2:22). ஆனால் நூற்றாண்டுகள் கடந்து வந்த போது இந்த பயிற்சி கைவிடப்பட்டது, மேலும் சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. நடபடிகள் புத்தகத்தில், ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே இது சர்வ சாதாரணமான பயிற்சியாக இருந்தது. கர்த்தருடைய பெயரைக் கூப்பிடும் நடைமுறைப் பயிற்சியால் அவர்களை எளிதில் இனங்கண்டுகொள்ள முடிந்தது (அப். 9:14, 21). நாம் பிரச்சினை அல்லது கடுந்துயரினுடாய் கடந்து செல்கிறோமோ இல்லையோ, எல்லா சூழ்நிலையிலும், எல்லா இடத்திலும் கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதை நாம் பயிற்சி செய்யலாம் (1 கொரி. 1:2).
"அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" என்று நடபடிகள் 2:21 கூறுகிறது.
நீங்கள் இப்போதே இரட்சிக்கப்படுவதற்கு, கர்த்தராகிய இயேசுவின் பெயரைக் கூப்பிட்டு அவரிடம் சொல்லுங்கள்:
“கர்த்தராகிய இயேசுவே! கர்த்தராகிய இயேசுவே! கர்த்தராகிய இயேசுவே! மிக எளிமையாக உம் பெயரை நான் கூப்பிட முடியும் என்பதற்காக நன்றி. என் குரலைக் கேட்பதற்காக நன்றி. வாரும், என்னை இரட்சியும். என்னை உமக்குத் திறக்கிறேன். உம் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறேன், கர்த்தராகிய இயேசுவே! நான் உம்மை நேசிக்கிறேன்."
மேலும், ரோமர் 10:12இல், இயேசுவே எல்லாருக்கும் கர்த்தர் என்றும் அவர் பெயரைக் கூப்பிடுகிற யாவருக்கும் ஐசுவரிமானவர் என்றும் பார்க்கிறோம். கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதன் மூலம் அவர் எவ்வளவு ஐசுவரிமானவர் என்பதை நாம் தொடர்ந்து அனுபவமாக்க முடியும். நம் பெளதிக சுவாசத்தைப் போலவே, கூப்பிடுவது எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடத்திலும் நம் ஐசுவரியமான தேவனை அனுபவமாக்குவதற்கான வழியாகும்.
கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1 இல், "கர்த்தருடைய பெயரை நோக்கிக் கூப்பிடுதல்" என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்தில் கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதைப் பற்றி மேலும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் இலவச பிரதியைக் கோருங்கள்.
*All quotes © by Living Stream Ministry. Verses taken from "The New Testament Recovery Version Online" at https://online.recoveryversion.bible