சமாதானமும் பாதுகாப்பும்

சமாதானமும் பாதுகாப்பும்

"சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்......" (1 தெச. 5:3)

மனித சமுதாயம் நமக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமாதானமும் பாதுகாப்பும் இல்லையெனில், நம் வாழ்க்கை பயத்திலும் சந்தேகத்திலுமே கழிந்து கொண்டிருக்கும். நமது அரசாங்கம் நம் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளது; நமது மருத்துவமனைகளும், மருந்தகங்களும் நம் ஆரோக்கியத்தையும், உடல் நலனையும் பேணும்படி நாடுகின்றன; நமது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நம் சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் பாதுகாப்பை வாக்குறுதியளிக்கின்றன. ஆனால் இறுதியில், நமது நிதி நிறுவனங்களாலும், நமது அரசாங்கத்தாலும், நமது சுகாதார அமைப்பாலும், நாம் சார்ந்திருக்கிற மற்ற பல காரியங்களாலும் நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை உண்மையில் நாம் எந்தளவுக்குச் சார்ந்து கொள்ள முடியும்?

போதிய அளவு ஆய்வுக்கும், கருத்தார்ந்த பரிசீலனைக்கும் உட்படுத்தப்படும்போது, நாம் நம்பிக்கை வைத்து, சார்ந்துகொண்டிருக்கிற ஒவ்வொன்றாலும், ஒவ்வொருவராலும், பூரண சமாதானத்தையும், பாதுகாப்பையும் நமக்கு வழங்க முடியாது. போர், வறுமை, நோய், குற்றம், அநீதி ஆகியவற்றால் இன்னமும் பீடிக்கப்பட்ட இந்த உலகில், நித்திய சமாதானத்தையும் பாதுகாப்பையும் நமக்கு உத்திரவாதமளிக்கக்கூடிய எதுவும் மனித சமுதாயத்தில் இல்லை. "சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்......" (1 தெச. 5:3) என்று வேதாகமமும் கூறுகிறது.

கடவுளுடைய வார்த்தையின்படி, உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய நித்திய ஜீவனிலும் மட்டுமே காணப்படுகிறது. கடவுள் தம் ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி, அவரைத் தந்தருளினார் என்பதை யோவான் 3:16 இல் காண்கிறோம். இங்கு பேசப்படும் நித்திய ஜீவன் காலத்தைப் பொருத்தவரையில் என்றும் நீடிக்கிறதாக மட்டுமல்லாமல், சுபாவத்தில் நித்தியமாகவும் தெய்வீகமாகவும் இருக்கிற கடவுளுடைய சிருஷ்டிக்கப்படாத ஜீவனாகிய தெய்வீக ஜீவனாகும். கடவுளே இந்த ஜீவன், அவருடைய ஜீவன் அழிக்கமுடியாதது (யோவான் 14:6). கடவுளைத் தவிர அதிக நித்தியமான பாதுகாப்பு எதுவுமில்லை.

நம் சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதுடன் தொடர்புடைய எல்லாப் பிரச்சினைகளும் இறுதியாக கிறிஸ்துவில் மட்டுமே தீர்க்கப்படுகின்றன. வியாதி, தொற்றுநோய், பொருளாதாரத்தின் சீர்குலைவு, திருடவும் கொல்லவும் அழிக்கவும் வரும் குற்றவாளிகள், தீவிரவாதிகள் ஆகிய பல தரப்பிலிருந்து வரும் அச்சுறுத்துதலின்கீழ் உலகம் இருக்கையில், நாம் கிறிஸ்துவின் ஜீவனைப் பெறும்படியும் அதை அபரிமிதமாகப் பெறும்படியும் கிறிஸ்து வந்தார் (யோவான் 10:10). கிறிஸ்து நம் பாதுகாப்பாக மட்டுமல்லாமல், அவர் நம் சமாதானமாகவும் இருக்கிறார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27).

 உங்கள் இதயம் கலக்கமடைந்தால், அவரை நம்புங்கள் (யோவான் 14:1). நீங்கள் கடவுளுடைய நித்திய ஜீவனின் பாதுகாப்பை இன்னும் பெறாவிட்டால், தேவ குமாரனுடைய பெயரின் மேல் நம்பிக்கை வைத்து (1 யோவான் 5:13), தமது ஜீவனை உங்களுக்குத் தரும்படி அவரிடம் கேளுங்கள். ஒரு திறந்த, நேர்மையான இதயத்துடன் அவரிடம் வந்து அவரிடம் இவ்வாறு சொல்லுங்கள்:

கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு தேவை. ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். எனக்குள் வாரும்! இப்போதே உம்முடைய ஜீவனை எனக்குத் தாரும். உமது சமாதானத்தால் என்னை நிரப்பும். ஆண்டவரே, நீர் என் உண்மையான சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்காக நன்றி. ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்.

மேலும் இலவச புத்தகங்களுக்கு இந்த இணையதளத்திற்கு வருகை தரவும்:
www.rhemabooks.org


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்